Wednesday, May 17, 2017

மூதூரில் முஸ்லிம்கள் வெளியேற்றம்! பதற்ற நிலையை கட்டுப்பாட்டில் கொண்டுவந்த அதிரடிப்படை


MAY 16, 2017

திருகோணமலை, மூதூர் - செல்வநகர் பகுதியில் ஏற்பட்டுள்ள அசாதாரண நிலையை தொடர்ந்து அங்கிருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை ஏற்பட்ட அசாதாரண நிலையை அடுத்து குறித்த பகுதியில் இருந்து வெளியேறியுள்ள முஸ்லிம் மக்கள் தோப்பூர் பகுதியில் உள்ள பள்ளிவாசல் ஒன்றில் தஞ்சமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மூதூர் - செல்வநகர் பகுதியில் உள்ள காணியில் தங்கியிருந்த முஸ்லிம் மக்களே வெளியேறியுள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
குறித்த காணியில் தங்கியிருந்த மக்களை வெளியேறுமாறு தெரிவித்து பொலிஸ் நிலையத்தில் பிக்கு ஒருவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இன்று மாலை இனந்தெரியாத நபர்களினால் குறித்த காணியில் தங்கியிருந்த மக்களின் குடியிருப்புகளுக்கு கல் வீசப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து ஏற்பட்ட அசாதாரண நிலையை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்து சுமார் 1000-1200 முஸ்லிம் மக்கள் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்தப் பகுதியில் குடியிருந்த மக்களை அவ்விடத்தில் இருந்து வெளியேறுமாறு தெரிவித்ததோடு, இது விகாரைக்குச் சொந்தமான காணி என்றும் நேற்றைய தினம் அந்த மக்களை வற்புறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் அங்கிருந்த மக்களின் குடியிருப்புக்கள் மீது இனம் தெரியாத நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட கல்லெறித் தாக்குதலினால் இந்த அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இரு மதக் குழுக்களிடையே ஏற்பட்ட இந்த அசாதாரண சூழ்நிலையினை அடுத்து அங்கு அதிரடிப்படையினர் இறக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த அசாதாரண சூழ்நிலையினை அடுத்து உயர் மட்டக் குழுவினரிடையேயான சந்திப்பொன்று நாளைக் காலை 9.30 அளவில் இடம்பெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கிடையில், அந்த பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோப்பூர் பகுதியில் தற்போது விசேட அதிரடி படை குவிக்கப்பட்டுள்ளதுடன், பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன் பதற்றமான சூழ்நிலையும் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.