Monday, June 9, 2014

2014-06-07 12:48:58 | General
Monday  9 Jun 2014
மொழிப்பாகுபாடும் பாரபட்சமும் இலங்கையின் இனங்கள் மத்தியில் அதிகளவு விரிசலை ஏற்படுத்தின என்பது தொடர்பாக மேலாதிக்கவாத கடும்போக்கு சிந்தனையாளர்கள் மத்தியில் இன்னமும் புரிந்துணர்வோ, சகிப்புத்தன்மையோ ஏற்படவில்லை என்பது துரதிஷ்டவசமானது.பல்லின, பல்மொழி பேசும் சமூகங்களைக் கொண்ட நாட்டில் விட்டுக்கொடுப்பும் புரிந்துணர்வும் அதிகளவுக்கு பரஸ்பரம் ஏற்பட்டால் மட்டுமே இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும்.

1956 இல் மறைந்த பிரதமர் பண்டாரநாயக்கவின் சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கம் தனிச்சிங்களச் சட்டத்தை அறிமுகப்படுத்தியதால் சிறுபான்மைத் தமிழ்பேசும் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் காயங்களை ஆற்றுப்படுத்துவதற்காக சிங்களத்துடன் தமிழ்மொழிக்கு தேசிய மொழியென்ற அந்தஸ்து அரசியலமைப்பினூடாக வழங்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அதனை தென்னிலங்கையிலுள்ள கடும்போக்கு சக்திகள் ஏற்று அங்கீகரிக்காத தன்மையே அதிகளவுக்கு காணப்படுகிறது. வடக்கு மாகாணசபை தனித்தமிழில்  ஜாதிக ஹெல உறுமயவிற்கு கடிதமொன்றை அனுப்பியிருந்ததாகவும் அது மொழிக்கொள்கையை மீறும் செயலெனவும் அக்கட்சி விசனம் தெரிவித்திருந்ததையும் அதற்குப் பதிலாக வடமாகாண சபையின் அவைத்தலைவர் அரசியலமைப்பின் பிரகாரம் வடக்கின் நிர்வாகமொழி  தமிழா இருப்பதால் அந்த உரிமையை ஒருபோதும் விட்டுக்கொடுக்க முடியாது என்று தெரிவித்திருந்ததாகவும் செய்திகள் வெளியாகியிருந்தன.

குறித்த மொழி பேசும் சமூகத்தவருடன் அவர்களின் மொழியிலேயே தொடர்பாடல்களை மேற்கொள்வது அதிகளவுக்கு விளங்கிக்கொள்ளும் தன்மையையும் பரஸ்பரம் புரிந்துணர்வையும் ஏற்படுத்தும்.

இந்தச் சிக்கலை நீக்குவதற்கு அரசாங்கம் மும்மொழிக்கொள்கையை அறிமுகப்படுத்தி முன்னெடுத்து வருகிறது. மொழிக்கொள்கைகளுக்கென தனியான அமைச்சையும் உருவாக்கி நடைமுறைப்படுத்தப்படுகின்றது.இம்மொழிக்கொள்கை  அமுலாக்கத்தை துரிதமாகவும் செம்மையாகவும் முன்னெடுப்பதற்கு  அதிகளவு நிதி ஒதுக்கீடு உட்பட தேவைப்படும் வளங்களை வழங்குவதற்கு அரசாங்கம் முன்னுரிமைகொடுத்து செயற்பட வேண்டும்.

இந்தியாவில் புதிய அரசாங்கம் பதவியேற்றுள்ள நிலையில் நேற்று முன்தினம் பாராளுமன்றத்தின் மக்களவையில் பதவிப்பிரமாணம் மேற்கொண்ட எம்.பி.க்கள் தத்தமது தாய்மொழியிலும் தமக்கு விருப்பமான மொழியிலும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

545 உறுப்பினர்கள் கொண்ட மக்களவையில் அன்றையதினம் 510 பேர் பதவிப் பிரமாணம் மேற்கொண்டனர். அவர்களுள் குஜராத்தி மொழியை தாய்மொழியாகக் கொண்ட பிரதமர் நரேந்திரமோடி, இந்தி மொழியில் கடவுளின் பெயரால் பதவிப் பிரமாணம் மேற்கொண்டிருக்கிறார்.

வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா ஸ்வராஜ், அமைச்சர்கள் உமாபாரதி, ஹரஷ் வர்த்தன்  போன்றவர்கள் தேவபாஷை னை இந்து மதத்தவர்கள் கருதும் சமஸ்கிருதத்தில் சத்தியப் பிரமாணம் மேற்கொண்டனர்.

இணையமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன் தமிழிலும் இதர  பல  உறுப்பினர்கள் தத்தமது தாய்மொழிகளான கன்னடம், இந்தி, மைத்திரி, கொங்கணி போன்ற மொழிகளிலும்  சத்தியப் பிரமாணம் எடுத்திருக்கின்றனர். காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி இந்தியிலும் அவரின் சகலையும் அமைச்சருமான  மேனகா காந்தி ஆங்கிலத்திலும் பதவிப் பிரமாணம் மேற்கொண்டுள்ளனர்.

இவை இந்தியாவின் கலாசார, மொழி ரீதியான பன்முகத்தன்மையின் வெளிப்பாடும் அங்கீகாரமுமென அந்நாட்டு ஊடகங்கள் பாராட்டியுள்ளதையும் காணமுடிகிறது. இந்த விடயத்திற்காக இந்தியாவின் அரசியல் கட்சிகள், தலைவர்கள் எல்லோரும் தார்மீக நெறிகளை  அரவணைத்துக்கொண்டவர்கள், நாகரிகம் நிறைந்தவர்கள் எனக் கருதிவிடமுடியாது.

இதற்கு உதாரணமாக  பாலியல் வல்லுறவு சம்பவங்கள் அந்நாட்டில் உக்கிரமாக அதிகரித்திருக்கும் நிலையில் உத்தரப் பிரதேச மாநிலத்தை ஆளும் கட்சியான சமாஜவாதக் கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவ் வல்லுறவில் ஈடுபடுவோர்கள் தொடர்பாக “ஆண்பிள்ளைகள் ஆண்பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள் என்று கூறியிருந்தவிடயமும் நேற்று முன்தினம் ஆளும் பாரதீய ஜனதாவைச் சேர்ந்த மத்தியப் பிரதேச மாநில  எம்.பி. பாபுலால்கௌர் என்பவர் பாலியல் வல்லுறவு பற்றி விபரிக்கையில் “சில சமயத்தில் இது சரி, சிலவேளைகளில் இது பிழையானதென கூறியிருந்தமையும் கடும் கண்டனங்களுக்கும் விமர்சனத்திற்கும் இலக்காகியிருந்தது.

ஆதிகால மூதாதையரின் பண்பு, மேலாதிக்கவாத, நிலப்பிரபுத்துவ சிந்தனை போன்ற தோற்றப்பாடுகளை அதிகாரத்திலிருப்போர் கொண்டிருப்பது பிரச்சினைக்கு தீர்வுகாண்பதற்கு உதவமாட்டாது என்று ஐ.நா.செயலாளர் நாயகம் பான்கீ மூன் முலாயம் சிங்கின் கருத்தை மறைமுகமாக சாடியிருந்தார்.

மொழி, இன, மத மேலாதிக்க சிந்தனைகளை எந்தவொரு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் கொண்டிருப்பதே சர்ச்சைகளும் பிரச்சினைகளும் பிளவுகளும் பூதாகாரமாவதற்கு வழியமைத்துக்கொடுக்கின்றன.

தத்தமது மொழிகள்,மதங்கள், கலாசாரங்கள், பண்பாடுகளைப் போன்றதே ஏனைய இன,மத, மொழிக்குழுமங்களினதும் என்ற புரிந்துணர்வை அதிகளவு ஏற்படுத்திக் கொள்வதும் சகிப்புணர்வுமே அரசியல், மத ,சமூகத்தலைவர்களுக்கு அவசியமானது. தலைவர்களிடம் இப்பண்புகள் இதய சுத்தியுடன் வெளிப்படும்போதே அவர்களைச் சார்ந்தோரும் அதனைப் பின்பற்றி நடப்பார்கள்.