Tuesday, February 25, 2014

கைதியின் மரணம் ஒரு அரசியல் கொலை என்பதை இலங்கை அரசு மறுக்க முடியாது; மனோ கணேசன்


news
logonbanner-125 பெப்ரவரி 2014, செவ்வாய்

தமிழ் அரசியல் கைதியான  விஸ்வலிங்கம் கோபிதாஸ்சின்  மரணம் ஒரு அரசியல் கொலை என்பதை இலங்கை அரசு மறுக்க முடியாது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தமிழ் அரசியல் தடுப்பு கைதியின் மரணத்துக்கு இலங்கை, இங்கிலாந்து அரசுகள் இரண்டும் பொறுப்பு கூற வேண்டும்

2007ம் வருடம் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்ட இவர் ஒரு பிரித்தானிய பிரஜை. கடந்த ஏழு வருடங்களாக சிறையில் தடுத்து வைக்கப்பட்ட நிலையில் 2009ம் வருடமும், 2011ம் வருடமும் சிறைக்குள்ளே தாக்குதல்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இதனால் இவர் தொடர்ச்சியாக உடல் உபாதையால் அவதிப்பட்டுள்ளார். அதேவேளை லண்டனில் வசிக்கும் இவரது மனைவியையும், பிள்ளைகளையும் பிரிந்து வாழ்ந்ததும் இவருக்கு பாரிய மன உளைச்சலை தந்துள்ளது.

இந்நிலையில் இவர் தற்போது கழிவறையில் இறந்து கிடக்க காணப்பட்டுள்ளார். இவரது மரணத்துக்கு உடனடி காரணம் எதுவாக இனிமேல் சொல்லப்பட்டாலும்கூட, இந்த மரணம் ஒரு அரசியல் கொலை என்பதை இலங்கை அரசு மறுக்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பில் பிரித்தானிய அரசாங்கமும் பொறுப்பு கூற கடமைப்பட்டுள்ளது. இது தொடர்பாக பிரித்தானிய அரசு இலங்கை அரசிடம் இப்போதாவது கேள்வி எழுப்ப வேண்டும்.

தமிழ் அரசியல் கைதிகள் விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர இந்த அரசு பிடிவாதமாக மறுத்து வருகிறது. இந்த விவகாரத்தை விரைவில் முடிவுக்கு கொண்டு வரும்படி இலங்கை அரசின் கற்றுக்கொண்ட ஆணைக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதையும் செய்ய இந்த அரசு தவறியுள்ளது. தமிழ் கைதிகள் ஒன்றில் உடல், உள உபாதைகளால் கொல்லப்படுகிறார்கள். அல்லது அடித்து கொல்லப்படுகிறார்கள்.

தமது பிரஜையின் மரணம் தொடர்பாகவும், அவர் மீது கடந்த காலங்களில் நிகழ்த்தப்பட்ட தாக்குதல்கள் தொடர்பாகவும், இவர் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்ட விசாரணை விவகாரங்கள் தொடர்பாகவும் பிரித்தானிய அரசு இலங்கை அரசிடம் இப்போதாவது கேள்வி எழுப்ப வேண்டும் என கேட்டுகொள்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.