Monday, April 28, 2014

சிங்கள அடிப்படை வாதிகளின் சிறைக்கைதியாக அரசாங்கம்: வாசுதேவ நாணயக்கார

 Mon, 04/28/2014 
Homeசிங்கள அடிப்படைவாதிகளின் சிறைக்கைதியாகியுள்ள அரசாங்கம் வட மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்காது அடிமைப்படுத்தி வைத்துள்ளது எனக் குற்றம் சாட்டும் அரசின் பங்காளிக் கட்சியான ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும் அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார வடக்கில் படையினர் வகை தொகையின்றி காணிகளை கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டுமென்றும் அமைச்சர் தெரிவித்தார்.
 
இது தொடர்பாக தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாடு தொடர்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார மேலும் தெரிவிக்கையில்,
 
வட மாகாண சபை தேர்தல் மட்டுமே நடத்தப்பட்டுள்ளதே தவிர அச்சபை இயங்குவதற்கான எந்த அதிகாரங்களும் மத்திய அரசாங்கத்தால் வழங்கப்படவில்லை.
வட மாகாண சபை செயலாளர் நியமிப்பில் முதலமைச்சருடன் எந்தவித பேச்சுவார்த்தைகளும் நடத்தப்படவில்லை. தீர்மானம் எடுக்கப்படவில்லை. அரசாங்கம் தன்னிச்சையாகவே அந்த நியமனத்தை வழங்கியது.
அதேபோன்று வட மாகாணத்திற்கான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நியமனத்திலும் இவ்வாறான செயற்பாடே இடம்பெற்றது.
 
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தில் மேற்கண்ட பதவிகள் தொடர்பில் மாகாண சபை முதலமைச்சருடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு கண்ட பின்னரே அப்பதவிகள் நியமிக்கப்பட வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் அரசாங்கம் இந்த வழிமுறைகள் எதனையும் பின்பற்றாமலேயே செயற்பட்டுள்ளது.
 
சிங்கள சக்திகளின் கைதியாக
தெற்கின் சிங்கள அடிப்படைவாதச் சக்திகளின் சிறைக்கைதியாக அரசாங்கம் மாறியுள்ளது.
இச் சக்திகளின் ஆலோசனைகளுக்கமைய வட மாகாண சபையை அடிமைப்படுத்தி அதற்கு கட்டளையிடும் அதிகாரியின் தோரணையிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளது.
வட மாகாண சபையை கலைக்க வேண்டுமென்ற சிங்கள அடிப்படைவாதிகளின் அபிலாஷையை பூர்த்தி செய்யும் விதத்திலேயே அனைத்தும் இடம்பெறுகின்றன.
 
ஜனாதிபதி
வட மாகாண சபைக்கு அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் பல முறை வலியுறுத்தியுள்ளோம்.
ஆனால் எதுவுமே சாத்தியப்படுவதாக இல்லை. எமது முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை.
 
வெளிநாடுகள்
இந்நிலை தொடர்வது எமது நாட்டுக்கு நல்லதல்ல. ஏனென்றால் புலம் பெயர்ந்து வாழும் தமிழர் அமைப்புக்கள் தாம் வாழும் நாடுகளின் அரசாங்கங்களிடமும் ஐ.நா. உட்பட சர்வதேச அமைப்புக்களிடமும் இலங்கை அரசாங்கம் வட மாகாண சபை தேர்தலை மட்டுமே நடத்தி உலகை ஏமாற்றியதே தவிர மாகாண சபைக்கான அதிகாரங்களை வழங்கவில்லை பட்டியலிட்டு குற்றச்சாட்டுக்களை சமர்ப்பிக்கும்.
 
அவ்வாறானதொரு சூழ்நிலையில் எமக்கெதிராக என்னென்ன குற்றச்சாட்டுக்களை சுமத்த முடியுமென வழிதேடிக் கொண்டிருக்கும் வெளிநாடுகளுக்கு சாதகமாக அமைந்து விடும்.
இது நமக்கு நாமே குழி தோண்டிக்கொள்ளும் நிலைமைக்கு ஒப்பானதாகும்.
 
ஆளுநர்
வட மாகாண ஆளுநராக இராணுவத்தை சேர்ந்த ஒருவரே நியமிக்கப்பட்டுள்ளார். இவரை வெளியேற்றி சிவிலியன் ஒருவரை நியமிக்க வேண்டும். அதனை தொடர்ந்து வலியுறுத்துகின்றோம். ஆனால் இன்னமும் சாத்தியப்படவில்லை.
 
காணிகள்
பாதுகாப்புக்கெனக் கூறிக் கொண்டு வட மாகாணத்தில் இராணுவத்தினர் வகை தொகையின்றி காணிகளை கையகப்படுத்துவது கைவிடப்பட வேண்டும்.
அத்தோடு மக்களின் காணிகளை கையகப்படுத்துவதும் ஏற்றுக் கொள்ளக் கூடியதல்ல. தேசிய பாதுகாப்புக்கென காணிகள் அடையாளம் காணப்படும் போது அது தொடர்பாக வட மாகாண சபையுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தி இணக்கப்பாடு காண வேண்டும்.
அது மட்டுமல்லாது பெருமளவு ஏக்கர் கணக்கில் காணிகளை கையகப்படுத்துவதை கைவிட்டு அதற்கான ஒரு வரையறையை வகுத்துக் கொள்ள வேண்டும். எல்லைகளை நிர்ணயித்துக் கொள்ள வேண்டும்.
 
இணக்கப்பாடு
அரசாங்கம் வட மாகாண சபையோடு இணக்கப்பாடோடு செயற்பட்டு அதிகாரங்களை வழங்கி தமிழ் மக்களின் நம்பிக்கையை பெற்றுக் கொள்ளும் திட்டங்களை முன்னகர்த்த வேண்டும்.
 
தெரிவுக்குழு
பாராளுமன்றத் தெரிவுக்குழுவுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு வர வேண்டும். அதன் மூலமே தீர்வுகளை எட்ட முடியும்.
 
தற்போது தென்னாபிரிக்கா மத்தியஸ்தம் வகிக்க முன் வந்துள்ளதால் கூட்டமைப்பு தெரிவுக்குழுவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற தீர்மானத்தை வட மாகாண சபை மேற்கொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது என்றும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.