Tuesday, May 27, 2014

13 வது சட்டதிருத்தம்: ராஜபக்சேவிடம் மோடி வலியுறுத்தல்!
Posted Date : 16:19 (27/05/2014)

புதுடெல்லி: இலங்கை அதிபர் ராஜபக்சேவை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியபோது,  தமிழர் பிரச்னை குறித்து  விவாதிக்கப்பட்டதாகவும், இலங்கை வருமாறு ராஜபக்சே விடுத்த அழைப்பை மோடி ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
 
இதுகுறித்து, இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் சுஜதா சிங் செய்தியாளர்களிடம் கூறுகையில், ''சார்க் நாடுகள் இடையிலான ஒத்துழைப்பு குறித்து சார்க் நாடுகளின் தலைவர்களிடம் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார். இருதரப்பு உறவுகள், வர்த்தகம், உள்ளிட்டவை குறித்தும் பிரதமர் விவாதித்தார்.
 
பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் செரீப்புடன், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசியபோது, தீவிரவாதம் குறித்து விவாதித்தார். மேலும், தீவிரவாத ஊடுருவல் குறித்து நவாஸிடம் பிரதமர் மோடி கவலை தெரிவித்தார். தீவிரவாதத்தை பாகிஸ்தான் ஊக்குவிக்க கூடாது என்றும் அவரிடம் மோடி வலியுறுத்தினார்.
 
தமிழர் பிரச்னை
 
இதேபோல், இலங்கை அதிபர் ராஜபக்சேவையும், பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து இருநாட்டு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். அப்போது, தமிழர் பிரச்னை குறித்தும் விவாதிக்கப்பட்டது. மேலும், 13வது சட்ட திருத்தத்தையும் அமல்படுத்துமாறு ராஜபக்சேவை கேட்டுக்கொண்டார்.
 
மேலும் தமிழர் பகுதிகளில் மறுவாழ்வு பணிகளை துரிதப்படுத்துமாறு ராஜபக்சேவை மோடி கேட்டுக்கொண்டதாகவும்,  தமிழர்களுக்கு அதிகாரம் அளிக்கும் 13 வது சட்டதிருத்த பிரிவை அமல்படுத்துமாறு வலியுறுத்தியதாகவும் சுஜதா சிங் தெரிவித்தார்.
 
அதே சமயம் இலங்கை உடன் அனைத்து துறைகளிலும் இந்தியாவின் ஒத்துழைப்பு தொடரும் என்றும் மோடி உறுதியளித்தார்.
 
மேலும் இந்த சந்திப்பின்போது, பிரதமர் மோடியை இலங்கை வருமாறு ராஜபக்சே அழைப்பு விடுத்தார். அதை ஏற்று இலங்கை வர பிரதமர் மோடி சம்மதம் தெரிவித்ததாகவும் சுஜதா சிங் தெரிவித்தார்.