Friday, May 30, 2014

நில, நீர் வளங்களை இராணுவம் கையகப்படுத்தியுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted On 29 May 2014
By : 
Comment: Off

வடமாகாணத்தில் முக்கிய பிரச்சினையாக இராணுவம் தமது நீர் மற்றும் நில வளங்களை கையகப்படுத்தி வைத்துள்ளது என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்திற்கு புதன்கிழமை (28) விஜயம் செய்த இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் றொபின் மூடியுடனான சந்திப்பின்போதே மேற்கண்டவாறு கூறியதாகவும் வடமாகாண முதலமைச்சர் தெரிவித்தார்.
முதலில் வடமாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறியை அவரது அலுவலகத்தில் சந்தித்த றொபின் மூடி, இதன் பின்னர் வடமாகாண முதலமைச்சரை அவரது வாசஸ்தலத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்புக் குறித்து வடமாகாண முதலமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,
‘மூடியுடன் அவுஸ்திரேலியா வெளிநாட்டலுவல்கள் வாணிபத் திணைக்கள மேலதிகச் செயலாளர் பிரைஸ் கட்சசன், திணைக்களப் பணிப்பாளர் சூக்ரேவ்ஸ் ஆகியோரும் வருகை தந்தனர். இவர்கள் வடமாகாணத்தில் அவுஸ்திரேலிய நாட்டின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப்படுகின்ற அபிவிருத்தியை பார்வையிட வந்தனர்.
அத்துடன், வடமாகாணசபை அவுஸ்திரேலியாவிடம் உதவிகளை எதிர்பார்க்கின்றதா? மற்றும் வடமாகாணசபை தனித்து இயங்க சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதா? என்பது பற்றி அறியவும் அவர்கள் இங்கு வருகை தந்தனர்.
இதன்போது, அரசியல் ரீதியாக தனித்து இயங்குவதற்கு பல முட்டுக்கட்டைகள் இருப்பதாக அவர்களுக்கு எடுத்துக் கூறினேன். எவ்வளவுதான் வடமாகாணத்திற்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ளதென ஆளுநர் கூறினாலும், அது நடைமுறைப்படுத்தப்படவில்லையெனக் கூறினேன்.
மேலும், முதலமைச்சரின் அனுசரணையில்லாமல் வடமாகாணச் செயலாளர் நியமிக்கப்பட்டுள்ளதையும் எடுத்துக்கூறினேன்.
அரசாங்கம் தங்களுக்கு தேவையான செயற்றிட்டங்களை செயற்படுத்த முன்வருவார்களே தவிர, மக்களுக்குத் தேவையான செயற்றிட்டங்களை மக்களின் பிரதிநிதிகள் மூலம் அறிந்து செயற்படுத்த முன்வரவில்லையெனத் தெரிவித்தேன்.
ஆற்றல் மேம்பாட்டுத் திட்டங்கள் அவசரமாக எமக்குத் தேவைப்படுவதாக அவர்களுக்கு கூறினேன். போரினால் பாதிக்கப்பட்டவர்கள், விதவைகள், வறியவர்களுக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும் கூறினேன்.
இதற்கு பதிலளித்த அவர்கள், இவை தொடர்பில் பரிசீலித்து உதவிகளைச் செய்வதாகக் கூறினர்.