Monday, January 5, 2015

பொய்யான ஆவணங்களை தயாரித்து மக்களை குழப்பும் முயற்சியில் அரசு : சுமந்திரன் எம்.பி.

Home
 by Priyatharshan on Mon, 01/05/2015
பொய்யான ஆவணங்களை தயாரித்து மக்களைக் குழப்பும் கீழ்த்தரமான வேலையை இந்த அரசாங்கம் செய்து வருகின்றது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்தார்.
எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்து மூதூரில் நல்லாட்சிக்கான தேசிய முன்னணி ஏற்பாடு செய்த பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 
அவர் மேலும் தெரிவிக்கையில்,
தமிழ், முஸ்லிம் மக்கள் அளிக்கும் வாக்குகளிலிருந்துதான் யார் ஜனாதிபதி என்பது தீர்மானிக்கப்படப்போகின்றது. இத்தேர்தலில் இந்த ஜனாதிபதி வெற்றி பெற்றுவிட்டால் இதன் பிறகு நீண்ட காலத்திற்கு இந்த நாட்டில் தேர்தலே இடம்பெறாது. அப்போது தேர்தலொன்றை நடத்துமாறு பெரும் போராட்டமே செய்ய வேண்டிவரும்.
எனவே, நாட்டின் தலைவிதியை நிர்ணயிக்கும் இத்தேர்தலில் தமிழ் பேசும் மக்கள் ஒன்றிணைந்து எதிரணிகளின் பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு வாக்களிக்க வேண்டும். அதன் மூலம் இந்த நாட்டை அழிவிலிருந்து பாதுகாக்கும் புனிதப் பணியை செய்ய வேண்டும். 
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிரசாரக் கூட்டங்களில் வெறும் பொய்யையே பேசி வருகின்றார். என்ற போதும் யாழ்ப்பாணத்திற்கு சென்ற அவர் அங்கு தான் ஒரு பிசாசு என்றும், மைத்திரி ஒரு தேவதை என்றும் ஒரு உண்மையை சொல்லி இருக்கின்றார் என்றார்.
நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமைத்துவ சபை உறுப்பினர் டாக்டர் கே.எம். ஸாஹிர் தலைமையில் இடம்பெற்ற இக்கூட்டத்தில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், வட மாகாண சபை உறுப்பினர் ஐ. யூப் அஸ்மின், நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தவிசாளர் அப்தூர் ரஹ்மான், அதன் தேசிய அமைப்பாளர் பிர்தௌஸ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.