Friday, January 2, 2015

தமிழர் ஒரே நாடு என்று சொன்னால், மகிந்த அரசு இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என சொல்கிறது : மனோ

Home
 Fri, 01/02/2015
எதிர்வரும் எட்டாம் திகதி நடைபெறவுள்ள தேர்தல், நம் நாட்டு ஜனாதிபதி தேர்தல், நாம் இந்த நாட்டு குடிமக்கள், நாம் இந்த நாட்டு தேர்தல் ஆணையாளரின் வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் வாக்காளர்கள், தேர்தலில் பங்குபற்றி, வாக்களித்து நமது  தேசிய கடமையை நாம் செய்வோம் என வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்கள் முன் வந்தால் அதை இந்த மகிந்த அரசு கொச்சை படுத்துகிறது. அதாவது, நாம் இந்நாட்டவர், இது ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது.
 
தமிழ் தேசிய கூட்டமைப்பு, வடக்கு, கிழக்கில் வாழும் தமிழ் மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சி. நடைபெறவுள்ள தேர்தல் தொடர்பில் அந்த கட்சி தனது நிலைப்பாட்டை இரண்டு தினங்களுக்கு முன் அறிவித்துள்ளது. 
அந்த அறிவிப்பு, ஆளும் அரசுக்கு எதிரான, பொது எதிரணிக்கு ஆதரவான அறிவிப்பு என்றவுடன் இந்த அரசுக்கு கோபம், ஆற்றாமை, ஆத்திரம் வந்துவிட்டது. ஒருவேளை கூட்டமைப்பின் ஆதரவு அரசுக்கு கிடைத்து இருந்தால், இந்த கோபம் மறைந்து கூட்டமைப்பின் மீது காதல் பிறந்திருக்கும் என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்தார்.

எதிர்கட்சி தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற விஷேட செய்தியாளர் மாநாட்டில் ஐ.தே.க. தலைமைக்குழு தவிசாளர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் ஆகியோருடன் கலந்துக்கொண்டு உரையாற்றிய மனோ கணேசன் மேலும் கூறியதாவது,

இந்த அரசு ஒரு சின்னத்தனமான கொள்கையை பின்பற்றுகிறது. நாடு என்பது வேறு, அரசாங்கம் என்பது வேறு என்பதை இந்த அரசு மறந்துவிட்டது. நாட்டை நேசிப்போர் தாங்கள் என்று அடிக்கொரு தரம் கூறுபவர்கள், இன்று நாட்டை விட தங்கள் கட்சிஅரசியல்தான் முக்கியம் என்று நிரூபித்துவிட்டார்கள்.

இந்த தேர்தல், சிங்கள நாட்டு தேர்தல்,  இதில் பங்கு பற்றி வாக்களிக்கும் அவசியம் எமக்கு கிடையாது என்று ஒருகாலத்தில் செயற்பட்டு  வந்த வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்களும், அவர்களது தலைமைகளும், இன்று இந்த தேர்தலில் பங்கு பற்றுவதன் மூலம் தாம் இந்த நாட்டு குடி மக்கள் என்ற அடிப்படையை ஏற்றுக்கொண்டு விட்டார்கள். இது ஒரு வரவேற்க கூடிய மாற்றம். இந்த நாட்டை நேசிக்கும் எவரும் இந்த மாற்றத்தை வரவேற்க வேண்டும்.

ஆனால், இந்த மகிந்த அரசு இதை புரிந்துகொள்ள  மறுக்கின்றது. மகிந்த தனது அமைச்சரவை சகாக்கள் மூலம், கூட்டமைப்பின் அறிவிப்பை திரித்து கூறி துர்பிரச்சாரம் செய்ய ஆரம்பித்துவிட்டார். கூட்டமைப்பு யாருக்கு ஆதரவு தருகிறது என்பதைவிட, வடக்கு கிழக்கு வாழ் தமிழ் மக்கள் இலங்கை ஜனாதிபதியை தெரிவு செய்யும் தேர்தலில் பங்கு பற்றுகிறார்கள் என்பது முக்கியமானதாகும். ஒரே நாடு என்று தமிழர் சொன்னால், இல்லை நீங்கள் வேறு நாட்டவர் என்று மகிந்த அரசு சொல்கிறது. தேர்தலில் பங்கு பற்றி வாக்களிக்கும் தமிழ் மக்களுக்கு தங்கள் விரும்பிய கட்சிக்கு, சின்னத்துக்கு வாக்களிக்கும்  உரிமை உண்டு. இதை எவரும் தட்டி பறிக்க   முடியாது. அதேபோல் அந்த மக்களின் ஆணையை பெற்ற ஒரு கட்சிக்கு தமது மக்கள் தொடர்பில்  வழிகாட்டல்  செய்ய பூரண உரிமை உண்டு.  இதையும் எவரும் தட்டி பறிக்க முடியாது.

இந்த அடிப்படையை இந்த அரசு  புரிந்துக்கொள்ள மறுக்கிறது. தங்களது சொந்த கட்சி அரசியல் தேவைகளுக்காக, ஆட்சி நீடிக்க வேண்டும் என்ற பதவி ஆசை காரணமாக மகிந்த அரசு படு பாதக இனவாத பிரச்சாரத்தை முன்னேடுக்கின்றது. கடந்த காலங்களிலும் இத்தகைய முறையில் தங்கள் கட்சி அரசியல், பதவி ஆசைகளை நிறைவேற்றுக்கொள்ள பெரும்பான்மை கட்சிகள் இனவாத பிரச்சாரம் செய்தார்கள். பின்னாளில் அவற்றுக்கான விலையை அவர்கள் கொடுக்கும் நிலைமை  ஏற்பட்டது. இதற்கான விலையை இந்த அரசும் விரைவில் கொடுக்க வேண்டி வரும்.