ஜூலை 31 2015

தமிழ்த்
தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞா பனத்தில் சமஷ்டி யென்ற பிரிவினை
கோரிக்கை உள்ளதாக முன்வைக்கப்படும் கருத்துக்கள் திரிபுபடுத்தப்பட்ட பொய்
என தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையத்தின் இணை ஏற்பாட்டாளர்
டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தெரிவித்தார். கடந்த காலத்தை நோக்கி
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு செல்ல முயற்சிக் கின்றது எனக் கூறி ஒரு
தரப்பினரைப் பயமுறுத்துவதற்கே இவ்வாறான திரிபுபடுத்தப்பட்ட கருத்துக்கள்
முன்வைக்கப் படுவதாக அவர் கூறினார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் சமஷ்டி முறையிலான
இலங்கைக்கே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒற்றையாட்சிக்கு உட்பட்ட இலங்கை
அல்ல. எனினும், பிரிக்கப்படாத இலங்கைக்குள் சமஷ்டி முறை பற்றியே
கூறப்பட்டுள்ளது. அதில் பிரிவினை பற்றி எதுவும் குறிப்பிடப்ப டவில்லையென
டொக்டர் பாக்கியசோதி சரவணமுத்து தினகரனுக்குத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் பிரதான கட்சி இலங்கை தமிழரசுக் கட்சி. இது
சமஷ்டி கொள்கையை கடைப்பிடிக்கும் கட்சியாகும். அப்படியான கட்சி சமஷ்டிக்கு
பரிந்துபேசாமல் இருக்க முடியாது. மீண்டும் பழைய நிலைக்கே அவர்கள்
செல்லப்போகிறார்கள் என மக்களை அச்சமூட்டுவதற்காக திரிபு படுத்தப்பட்ட
பொய்யே த. தே. கூ பிரிவினை கோருவதாக முன்வைக்கப்படும் கருத்து என்றும் அவர்
கூறினார்.
சமஷ்டிக் கொள்கை என்பது பிரிவினையைக் கோருவது அல்ல. இவ்வாறான கருத்துக்கள்
முட்டாள் தனமானவை. இதற்கு மக்கள் வாக்குகள் மூலம் பதில் சொல்வார்கள்
என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
அதேநேரம், அரசியல் கட்சிகளால் முன்னெடுக்கப்படும் இனரீதியான பிரசாரங்கள்
துரதிஷ்டவசமானவை. இதனை தடுத்து நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால்
வாக்காளர்கள் அதற்கான சிறந்த பதிலை வழங்குவார்கள் என்றும் டொக்டர்
பாக்கியசோதி சரவணமுத்து மேலும் குறிப்பிட்டார்.