Tuesday, May 27, 2014

என்னைக் கொல்வதற்கு சதித் திட்டம்: அச்சத்தில் மரத்தின் மேல் இரவைக்களித்த வட்டரக்க தேரர்

என்னைக் கொல்வதற்கு சதித் திட்டம்: அச்சத்தில் மரத்தின் மேல் இரவைக்களித்த வட்டரக்க தேரர்
தன்னைப் படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக மகியங்கணை பிரதேச சபையின் உறுப்பினரும் ஜாதிக பல சேனாவின் தலைவருமான வண வட்டரக்க விஜித தேரர் குற்றஞ்சாட்டியுள்ளார். இந்த சதியில் பொலிஸாருடைய சம்பந்தம் உள்ளதாகவும் அவர் கூறுகின்றார். மகியங்கiயிலுள்ள தன்னுடைய விகாரைக்கு இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் சென்ற போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

வட்ரக்க தேரர் விகாரைக்குச் சென்றபோது அருகேயுள்ள காட்டுப்பகுதியிலிருந்து தொடர்ச்சியாக வெடிச்சத்தங்கள் கேட்டன. இதனால் அச்சமடைந்த தேரர், காட்டுப் பகுதியிலுள்ள மரம் ஒன்றில் ஏறி இரவு முழுவதும் இருந்ததாகக் கூறப்படுகின்றது.  இது தொடர்பாகக் கருத்து வெளியிட்ட தேரர், தன்னைப் படுகொலை செய்வதற்கான திட்டம் ஒன்றை பொலிஸார் தீட்டியிருப்பதாகவும், அதற்கான தருணத்தை அவர்கள் எதிர்பார்த்திருப்பதாகவும் தெரிவித்தார்.

தன்னுடைய விகாரை அமைந்திருக்கும் பகுதியில் காட்டு யானைகள் எதுவும் இல்லை எனவும் குறிப்பிட்ட அவர், காட்டு யானைகளைத் துரத்துவதற்காகத்தான் வெடி வைக்கப்பட்டது என பொலிஸார் சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் தெரிவித்தார்.  வட்டரக்க தேரர் கொழும்பில் ஊடகவியலாளர் மாநாடு ஒன்றை நடத்த முயன்றபோது பொது பல சேனா அமைப்பினரால் தாக்கப்பட்டமை நினைவிருக்கலாம். இதன் போது ஊடகவியலாளர் மாநாடும் குழப்பப்பட்டது.

இதனையடுத்து அமைச்சர் றிசார்ட் பதியுதீனின் அலுவலகத்தில் தேரர் மறைந்திருப்பதாகக் கூறி, பொதுபல சேனா  அமைப்பினர் அவரது அலுவலகத்தை சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.  இந்தப் பின்னணியிலேயே தன்னைப் படுகொலை செய்வதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக வட்டரக்க தேரர் குறிப்பிட்டிருக்கின்றார்.