Feb 24, 2015
ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் சர்வதேச விசாரணை அறிக்கையை வெளிடக்
கோரியும் இலங்கை அரசாங்கத்தின் உள்ளகப் பொறிமுறையை நிராகரித்தும்
யாழ்.பல்கலைக்கழக சமூகம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்புப்
பேரணியொன்றை நடத்தியுள்ளது.
யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இதற்கான அழைப்பை விடுத்திருந்தது.
யாழ் பல்கலைக்கழகத்தில் இருந்து புறப்பட்ட இந்தப் பேரணியில் மன்னார் ஆயர்
இராயப்பு ஜோசப் தலைமையிலான தமிழ் சிவில் சமூக அமைப்பினரும், பல்வேறு பொது
அமைப்புக்களையும் சேர்ந்த பெரும் எண்ணிக்கையானோர் கலந்து கொண்டனர். இதற்கு
அரசியல் கட்சிகளும் ஆதரவு வழங்கியிருந்தன. பேரணியில் பொது அமைப்புக்களுடன்
நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய மாவை சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன்,
சிவசக்தி ஆனந்தன், செல்வம் அடைக்கலநாதன் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களும்
கலந்து கொண்டனர்.
ஐ.நா. மனிதவுரிமைகள் ஆணையாளரினால், மேற்கொள்ளப்பட்ட, இலங்கையிலே
இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்களின் மீதான விசாரணை அறிக்கை
தாமதப்படுத்தப்பட்டதன் மூலம் எமக்கு ஏற்பட்ட மனவேதனையை சர்வதேச
சமூகத்திற்கு இந்தப் பேரணி வெளிப்படுத்தியுள்ளது.
அதேநேரம், திட்டமிட்டபடி இந்த அறிக்கை வெளியிடப்பட வேண்டும் என்றும், இந்த
அறிக்கையிலே கண்டுகொள்ளப்படக் கூடிய குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதி
விசாரணையொன்று வேண்டும் எனவும் இந்தப் பேரணியின் மூலம் கோரிக்கை
விடுக்கப்பட்டிருக்கின்றது.
சர்வதேச விசாரணையாளர்கள் இலங்கைக்குள் வந்து பாதிக்கப்பட்ட மக்களிடம்
சாட்சியங்களைப் பதிவு செய்ய வேண்டும். அவ்வாறு சாட்சியமளிக்கும்
சாட்சிகளுக்கு, பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று இந்தப் பேரணியின் மூலம்
கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
பலாலி வீதி வழியாக கந்தர் மடம் சந்தியைச் சென்றடைந்த பேரணி அங்கிருந்து
நல்லூர் கந்தசாமி கோவிலில் சென்று முடிவடைந்தது. கோரிக்கைகள் அடங்கிய மகஜர்
ஒன்று ஐநா சபைக்கு அனுப்பி வைக்கப்படுவதற்காக சிவில் சமூகத் தலைவராகிய
மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் மற்றும் நல்லூர் ஆலயக் குருக்கள் வாசுதேவ
குருக்கள் ஆகியோரிடம் யாழ் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் இராசகுமாரன்
கையளித்தார்.
இந்த மகஜரை நேரடியாகக் கொழும்புக்கு எடுத்துச் சென்று ஐநா அலுவலக அதிகாரிகளிடம் கையளிப்பதாக மன்னார் ஆயர் இங்கு உறுதியளித்தார்.